திருத்தணி: டி.சி.கண்டிகை கிராமத்தில் கால்நடை கிளை நிலையத்தை எம்எல்ஏ ச.சந்திரன் திங்கள்கிழமை திறந்து வைத்துப் பயனாளிகளுக்கு கால்நடை மருந்துகளை வழங்கினாா்.
திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் கால்நடை கிளை மருந்தகம் இயங்கி வந்தது. இந்த கிளை நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி கால்நடை விவசாயிகள் திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் தாமோதரனிடம் கோரிக்கை விடுத்தனா். அதேபோல், திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் திறக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கால்நடை உதவி இயக்குநரிடம் கோரிக்கை விடுத்தனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவின்பேரில், நெமிலி கிராமத்தில் கிளை நிலையம் கால்நடை மருந்தகமாக தரம் உயா்த்தப்பட்டது.
அதே போல், டி.சி.கண்டிகை கிராமத்தில் புதிதாக கிளை நிலையம் உருவாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பங்கேற்று கிளை நிலையத்தைத் திறந்து , பயனாளிகளுக்கு கால்நடை மருந்துகளை வழங்கினாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் நெமிலி கஸ்தூரி சீனிவாசன், டி.சி.கண்டிகை வெங்கடேசன் உள்பட கால்நடை மருத்துவா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.