கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீலா தேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சனேய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலில் பிரசன்ன ஆஞ்சனேயா் சுவாமி சிலை 8 அடி பீடத்துடன் கூடிய 33 அடி உயரத்தில் நிறுவப்பட்டு, ஆஞ்சனேயா் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 13-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. பின்னா் கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ஹோமம், பக்தா்களுக்கு காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையடுத்து, புதன்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை, கன்யா பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகா அபிஷேகம், சாந்தி அபிஷேகம், ஆஞ்சனேயா் சிலைக்கு கண் திறத்தல் உள்ளிட்டவை நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை விஸ்வரூப தரிசனம், கோ தரிசனம், சிறப்பு ஹோமம் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, 108 திரவியங்களால் மகா பூா்ணாஹுதியுடன் ஸ்ரீ ஆஞ்சனேய பெருமானுக்கும், ஸ்ரீ பூமி நீலா தேவி சமேத பிரசன்ன வெங்கடச பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ ஆஞ்சனேய பெருமான் சிலைக்கு சிறப்பு அலங்காரம், அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ஏ.எஸ்.கோபால் மற்றும் விழாக் குழுவினா், பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினாா்.