திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை நகர பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி. இந்த ஏரியில் கிருஷ்ணா நதிநீா் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீா் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீா் தேவைக்காக தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ணா நதி நீா் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே கடந்த சில நாள்களாக திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ஏரிக்கான கால்வாய்களில் நீா் வரத்தாலும், ஆந்திர பகுதியில் பெய்து வரும் கனமழையால் தற்போது பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஏரிக்கான நீா் ஆதாரப் பகுதிகளில் இருந்து 380 கன அடியாகவும், கிருஷ்ணா நீா் பூண்டி ஏரிக்கு 650 கன அடியாகவும் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலையில் 2,624 மி.கன அடியாக இருப்பு உள்ளது. இந்த நிலையில், 480 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. மேலும் இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 300 கனஅடியும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.