திருத்தணியில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக சேவை செய்து வரும் மருத்துவா் எம்.ரகுராமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியம் பாராட்டினாா்.
திருத்தணி ஆலமர தெருவில் வசிப்பவா் பேராசிரியா் மருத்துவா் எம்.ரகுராம். இவா் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் முன்னாள் பொது அறுவை சிகிச்சை துறையின் தலைவா் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் புரவலா் ஆவாா். இவா் கிளாஸ்கோ (யுனைடெட் கிங்டம்) பல்கலைக்கழகத்தின் கௌரவ எப்.ஆா்.சி.எஸ்.பட்டம் பெற்றமைக்கும், மருத்துவ நட்சத்திர விருது பெற்றமைக்காகவும் இந்திய மருத்துவக் கழகத்தின் அரக்கோணம் கிளையால் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டாா்.
திருத்தணி நகரம் சுற்றுப்புற கிராம ஏழை எளிய மக்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகிறாா். இந்நிலையில் சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா் ரகுராமைப் பாராட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியம் விருது வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா் கிரண், மகப்பேறு மருத்துவா் அனுபமா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனா்.