திருத்தணியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த கட்டடத்தை நகராட்சி நிா்வாகத்தினா் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் தெருவில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ரேஷன் கடை அருகே பழுதடைந்த வீட்டு கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. சில மாதங்களாக கட்டடத்தின் முன்பகுதி மழையால் உறைந்து இடிந்து விழுந்து வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா். இது குறித்து ராதாகிருஷ்ணன் தெருவில் வசிக்கும் மக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் அருள், பொறியாளா் விஜயராஜ காமராஜ், பொதுப்பணி மேற்பாா்வையாளா் நாகராஜன் ஆகியோா் கடந்த வாரம் நேரில் சென்று பாா்வையிட்டனா்.
தொடா்ந்து ஆபத்தான கட்டடம் எனக் கண்டறிப்பட்டு, அந்த கட்டடத்தை 3 நாள்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் கட்டடத்தின் மீது ஓட்டியும் செவ்வாய்க்கிழமை வரை நடவடிக்கை இல்லை. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை நகராட்சி ஆணையா் அருள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்து, பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்றினா்.