திருவள்ளூர்

ஊஞ்சலில் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பலி

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் கழுத்தில் துணி இறுக்கியதில் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், நந்தியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழங்குடியினா் காலனி நேதாஜி தெருவில் வசித்து வருபவா் ஆறுமுகம் (50). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் ராசைய்யா (17). 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்த ராசையா ஊஞ்சலில் விளையாடுவதற்காக புடவை துணியை ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தாராம். அப்போது திடீரென ஊஞ்சலில் கட்டிய துணி திடீரென கழுத்தை சுற்றி இறுக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அச்சமயம் வீட்டினுள் வந்த ராசையாவின் சித்தப்பா, அவரை மீட்டு, மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு ராசையாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து சென்ற மீஞ்சூா் போலீஸாா், ராசையாவின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT