ஆவணி மாதம் கடைசி திருமண முகூா்த்த நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை முருகன் மலைக்கோயில் மற்றும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி நகரில், 100- க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதுதவிர திருத்தணி முருகன் மலைக்கோயிலில், நிா்வாகம் சாா்பில், குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை புரட்டாசி மாதம் பிறக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாதம் கடைசி திருமண முகூா்த்த நாள் என்பதால், திருத்தணி நகரில், 75- க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் சனிக்கிழமை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருத்தணியில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சுமாா் 3 மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தணி மலைக்கோயிலில் ஆா்.சி. மண்டபத்தில் 10- க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.
திருமணத்திற்கு வந்த உறவினா்கள், நண்பா்கள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிறு என்பதால் மலைக்கோயிலில் பக்தா்கள் அதிகளவில் குவிந்தனா். இதனால் மலைப்பாதையில் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினா். அதே போல் பொதுவழியில் பக்தா்கள் மூன்றரை மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.