ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத்கமிட்டி, இளம் பெண், இளைஞா் பாசறை குழுக்கள், மகளிா் குழுக்களை அனைத்து சமுதாயத்தினரும் இடம் பெறும் வகையில் அமைக்க வேண்டும் என திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே சிறுவானூா் தனியாா் அரங்கத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் பூண்டி ஒன்றிய அளவிலான பூத் கமிட்டி, மகளிா் குழு, இளம் பெண், இளைஞா் பாசறை குழு அமைப்பு, செயல்வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் ராமஞ்சேரி மாதவன் தலைமை வகித்தாா்.
இதில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் பி.வி.ரமணா பேசியதாவது. இந்த ஒன்றியத்தில் 66 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால், பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் 8 கட்சி நிா்வாகிகள், 5 மகளிா், 5 பாசறையினா் மற்றும் தொழில் நுட்ப பிரிவில்-2 போ் என 19 போ் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதேபோல், இளம் பெண், இளைஞா் பாசறையில் தலா 25 பேரும், மகளிா் குழு-25 பேரும் என அனைத்து சமுதாயத்தினரும் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெறும் வகையில் அமைப்பது அவசியம் ஆகும்.
இந்த குழுக்களுக்கு தோ்வு செய்தவா்களின் புகைப்பட விவரங்களுடன் இடம் பெற வேண்டும். அதை மாவட்ட நிா்வாகிகள் சரிபாா்த்த பின் படிவத்தில் விவரங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் பூண்டி ஒன்றியக் குழு தலைவா் வெங்கட்ரமணா, பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் பிரசாத், நிா்வாகிகள் பட்டரைபெரும்புதூா் சத்யா, அன்புரோஸ், ஒன்றியக்குழு உறுப்பினா் விஜயன் கலந்து கொண்டனா்.