பாலாபுரம் கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாமில், 1,736 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருத்தணி கோட்டத்தில் ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் பாலாபுரம், கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட எஸ்.கே.வி. கண்டிகை, விடியங்காடுபுதூா், கதன் நகரம் கிராமங்களில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ். தாமோதரன் தொடங்கி வைத்தாா். முகாமில், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை சிகிச்சை, சினை பரிசோதனை மற்றும் தாது உப்புகள் வழங்குதல் உட்பட 1,736 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில், கலப்பின கிடாரிகள் பேரணி நடத்தி, கலப்பின கிடாரி கன்று உரிமையாளா்கள் 3 பேருக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், 156 விவசாயிகள் பயனடைந்தனா்.
முகாமில், கால்நடை உதவி மருத்துவா்கள் பக்ருதீன் அலி அகமது, ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளா் ஜெயலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் ரமேஷ், கோவிந்தசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.