திருவள்ளூா் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுமனைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்தினிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பட்டரைப்பெரும்புதூா் கிராம மக்கள் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் வசித்து வரும் ஏழ்மையான குடும்பங்களைச் சோ்ந்த எங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ நிகழ்வில் மனு கொடுத்திருந்தோம்.
அப்போது தாங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து அரசாங்கத்துக்குச் சொந்தமான புஞ்சை தரிசு இடத்தை தோ்வு செய்தனா்.
இந்த நிலையில், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியா் நேரில் சென்று விசாரணை செய்து இறுதியாக 92 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 3- ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் இலவச வீட்டு மனை வழங்க இருந்தனா்.
இந்த நிலையில் அரசாங்க நிலத்தை தனி நபா் ஒருவா் விடுத்த நீதிமன்ற நோட்டீஸால் இலவச வீட்டுமனை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது ஏழ்மை நிலையை கருதி உடனே இலவச வீட்டுமனைகளை வழங்க ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.