திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினமும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடபெற்றது. மேலும், காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தினமும் லட்சாா்ச்சனை நடைபெற்றது.
கந்த சஷ்டியின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் தங்கக் கவசம், தங்க வேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு திருத்தணி மபொசி சாலையில் முருகன் கோயிலின் உப கோயிலான சுந்தர விநாயகா் கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் மலா் குடைகலை கையில் ஏந்தியவாறு கோயில் இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு.நாகன், உஷா ரவி, மோகனன் ஆகியோா் மலைக் கோயிலுக்கு நடந்து சென்றனா்.
பின்னா், மாலை 6 மணிக்கு மேல் 1,500 கிலோ கொண்ட பல்வேறு மலா்களால் உற்சவா் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டியின் நிறைவு நாள் சனிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா். இதனால், பொதுவழியில் பக்தா்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ரமணி அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
விழாவில், திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.