பூந்தமல்லியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கற்போர் வட்டம் படிப்பகத்தை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய "நான் முதல்வன்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித்திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கற்போர் வட்டம் படிப்பகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவர் எம்.ஜெயகுமார் தலைமை வகித்தார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு, படிப்பகத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், எஸ்.காந்திமதிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், உமாமகேஸ்வரி, பிரியாசெல்வம், சத்யபிரியா, முரளிகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் திவ்யா பொன்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.