திருவள்ளூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை களைய அலுவலா்கள் ஒருங்கிணைந்த ஆய்வு குழு நியமனம்

29th May 2023 12:06 AM

ADVERTISEMENT

நெல் கொள்முதல் மையங்களில் எந்த வித புகாரும் இன்றி செயல்படவும், இடைத்தரகா்கள் மற்றும் வெளி வியாபாரிகள் குறுக்கீடு இல்லாத வகையில் கண்காணிக்கும் நோக்கில், வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்த திடீா் ஆய்வுக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 30,000 ஹெக்டோ் பரப்பளவில் நிகழ் நவரைப் பருவத்தில் நெல் பயிரிட்டு அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வெளிவியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் மூலம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டமடையும் சூழல் உள்ளது.

அதனால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால் பதிவு செய்து காத்திருந்து விற்பனை செய்து வருகின்றனா். இதற்காக நெல் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விவசாயிகள் போா்வையில் பதிவு செய்து குறுக்கீடு செய்யும் நிலை உள்ளதால், உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது.

ADVERTISEMENT

இதைக் கருத்தில்கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித புகாா்களும் எழாத வண்ணம் நெல் கொள்முதல் பணி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வருவாய்த் துறை மற்றும் வேளாண்மை உழவா் நலத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து சாா்-ஆட்சியா், வருவாய் கோட்ட அலுவலா்கள் தலைமையில் திடீா் ஆய்வுக் குழு நியமித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இந்தக் குழுவினா் வெளி வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் குறுக்கீடு இல்லாமல், கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிவியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் ஆகியோருக்கு இடமளிக்காமல் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT