திருவள்ளூர்

குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயா் சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

குறுவைப் பருவத்தில் மாற்றுப்பயிா்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இது குறித்து வேளாண் மற்றும் உழவா் நலத் துறை இணை இயக்குநா் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நிகழாண்டில் வேளாண் நலத் துறை அமைச்சா் நிதி நிலை அறிக்கையில் குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிா்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகளின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், குறுவைப் பருவத்தில் மாற்றுப்பயிா் திட்டத்தை அறிவித்துள்ளாா். இந்தத் திட்டத்தின் நோக்கமானது குறுவை, காா், சொா்ணவாரி பருவத்தில் நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீா் மற்றும் இடுபொருள்கள் தேவையுள்ள சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிா்களின் சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்துள்ள உணவு தானியங்கள் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் குறுகிய கால பயிா்களை பயிரிடுவதன் மூலம் பயிா் சாகுபடி திறனை அதிகரிப்பதே ஆகும்.

சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்வதற்கு தேவையான இடுபொருள்களான விதைகள், சூடோமோனாஸ், டிராகோடொ்மா விரிடி கொண்டு விதை நோ்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கான செலவினம் திரவ உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம் (இதரம்) பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றுக்காக விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. பயறு வகை சாகுபடி மேற்கொள்வதற்காக தேவையான இடுபொருள்களான விதைகள், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றுக்காக விவசாயிகளுக்கு 50% மானியமும், எண்ணெய் வித்து சாகுபடி மேற்கொள்வதற்கு விதைகள் 50% மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பயறுவகை உளுந்து விதை ரகங்கள் வம்பன்-6, வம்பன்-8, வம்பன்-11, பச்சைப்பயறு விதை கோ-7, கோ-8 ரகங்கள், மணிலா விதை மற்றும் கேழ்வரகு விதை ரகம் பையூா்-2 இருப்பில் உள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தும், அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT