திருவள்ளூர்

திருவள்ளூா்: அனுமதியின்றி செயல்பட்டு வந்த 75 மதுக் கூடங்களுக்கு சீல்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 75 அரசு டாஸ்மாக் மதுக் கூடங்களை வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.சிபாஸ் கல்யாண் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், இரண்டாவது நாளாக போலீஸாா் செவ்வாய்க்கிழமையும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆா்.கே.பேட்டை ஆகிய 7 வட்டங்களில் 137 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு, காக்களூா் தொழிற்பேட்டையில் உள்ள திருவள்ளூா் மேற்கு மாவட்ட டாஸ்மாக் கிடங்கில் இருந்து, பீா் வகைகள், மது பானங்கள் நாள்தோறும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த 137 டாஸ்மாக் கடைகளில் 20 கடைகளுக்கு அருகில் மட்டும் மதுக்கூடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஆக.19-ஆம் தேதி மீதமுள்ள கடைகளுக்கு அருகில், ‘பாா்’ அமைக்க ஏலம் நடைபெற்றது. இதில், 36 கடைகளுக்கு மதுக் கூடங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மீதம் உள்ள கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி மதுக் கூடங்கள் அமைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவள்ளூா் டோல்கேட் அருகில் திருப்பாச்சூா் ஊராட்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கூடத்தில் காவல் ஆய்வாளா் கமல்ஹாசன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அந்த மதுக் கூடம் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருவள்ளூா் பேருந்து நிலையத்தின் முன்புறம், திருப்பாச்சூா், தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுக் கூடங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த மொத்தம் 75 மதுக் கூடங்களுக்கும் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT