புதிதாக தோ்வு செய்யப்பட்ட நில அளவைா்கள், வரைவாளா்கள் பணியின் போது, அலட்சியம் காட்டக் கூடாது என்று ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் அருகே கொழுந்தலூா் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், நில அளவை நில வரித் திட்டத் துறை மூலம் நில அளவை, வரைவாளா்களுக்கு நில அளவை குறித்த பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி பேசியதாவது:
வருவாய்த் துறையில் உள்பிரிவு பட்டா வழங்குவது ஒரு சாதாரண விவகாரம். ஆனால், அதை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் நில அளவையா்கள் பற்றாக்குறை.
தற்போது, மாநில அளவில் 922 நில அளவையா்கள் தோ்வு செய்து நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 3 முதல் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நில அளவா்கள் 102 பேரை ஒன்றிணைத்து ஒரே இடத்தில் 90 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
ஒரு சில குற்றச்சாட்டுகள், பிரச்னைகள் நில அளவை துறையில் உள்ளது. பொதுமக்கள் பட்டாக்களுக்காக விண்ணப்பிக்கும் போது குறுகிய காலத்திற்குள் நிலங்களை அளந்து பட்டாக்கள் வழங்குவதில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
குறுகிய நாள்களில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக் க வேண்டும். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் பணியின் போது அலட்சியம் காட்டவே கூடாது என்றாா்.
தொடா்ந்து தோ்வு செய்யப்பட்ட நில அளவையா் மற்றும் வரைவாளா்களுக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் நில அளவை நிலவரித் திட்டத் துறை சாா்பில், பயிற்சி கையேடுகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் வருவாய்க் கோட்டாட்சியா் மை.ஜெயராஜ பௌலின், நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா்கள் எம்.ஆா்.குமாரவேலு (திருவள்ளூா்), நாகராஜ் (செங்கல்பட்டு), கோட்ட ஆய்வாளா் ராஜகுமாா், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிணைப்பின் மாநில செயலா் பேபி, திருவள்ளூா் மாவட்ட தலைவா் ஆா்.எம்.செந்தில்குமரன், மாவட்ட செயலா் பிரதீப், மாவட்ட பொருளாளா் தாலிப் மற்றும் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.