திருவள்ளூர்

தமிழகத்தில் விரைவில் அடுக்கு மாடி தொழிற்கூடங்கள்

19th May 2023 07:17 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இடப்பற்றாக் குறையைப் போக்கும் வகையில், அடுக்குமாடி கட்டடங்கள் அமைத்து தொழிற்சாலைகளை நிறுவும் புதிய திட்டம் அடுத்த 3 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருமழிசை, காக்களூா், அம்பத்தூா் ஆகிய தொழிற்பேட்டைகளில் ரூ. 110 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன், அரசு செயலாளா் மற்றும் ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தொழிற்பேட்டைகளில் அடிப்படை வசதிகள், அங்கு மேற்கொண்டு வரும் பணிகளான, காக்களூா் சிட்கோவில் ரூ. 8.30 கோடியிலும், திருமழிசையில் ரூ. 6.89 கோடியில் நடைபெற்று வரும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, காக்களூா் சிட்கோ வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் திருமழிசை, காக்களூா், அம்பத்தூா் ஆகிய தொழிற்பேட்டைகளில் ரூ. 15.19 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள தொழில்முனைவோா்களின் வேண்டுகோளை ஏற்று, ரூ. 15 கோடியில் தேவையான அனைத்து அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தொழிற்சாலை தொடங்க குறைந்தது 50 முதல் 100 ஏக்கா் தேவையாக உள்ளது.

ADVERTISEMENT

தற்போது, தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இடப்பற்றாக் குறையைப் போக்க தொழிற்சாலைகள் தொடங்க விரும்புவோா் அடுக்குமாடி கட்டடங்களில் நிறுவும் புதிய திட்டத்தை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன்மூலம் அடுக்குமாடி வளாகங்கள் அமைத்து அங்கு தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

முதல் கட்டமாக கிண்டி தொழிற்பேட்டையில் ரூ. 90.13 கோடியில் 152 தொழிற்சாலைகளிலும், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ரூ. 60.55 கோடியில் 112 தொழிற்சாலைகளிலும் அடுக்குமாடி வளாகங்கள் 80% பணிகள் நிறைவு பெற்று, அடுத்த 3 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

இதேபோல், நிகழாண்டில் கிண்டி தொழிற்பேட்டை, வேலூா் தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், மதுரை மாவட்டம் கே.புதூா் ஆகிய இடங்களில் ரூ. 214 கோடியில் அடுக்கு மாடி தொழிற்கூட வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன.

கடந்தாண்டு சிறு, குறு தொழில்கள் செய்வதற்கு ரூ. 100 கோடிக்கு திட்டமிட்டிருந்த நிலையில், கூடுதலாக ரூ. 165 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 122 சிப்காட் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2 சிப்காட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம்-தொரூா், திருச்சி-மணப்பாறை, மதுரை-சக்கியமங்கலம் உள்பட 5 இடங்களில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரத்தில் அறிவிக்கப்பட்ட சிப்காட் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், விரைவில் சரி செய்து தொழில் நிறுவனங்கள் நிறுவுதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தொழில் வளா்ச்சி வேகமாக வளா்ந்து வருவதால், வடமாநிலத் தொழிலாளா்கள் அதிகளவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனா். அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தங்கிப் பணிபுரியும் வகையில் தங்கும் விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பத்தூரில் ரூ. 25.45 கோடியில் 800 தொழிலாளா்கள், கோவை மாவட்டம், குறிச்சியில் ரூ. 22 கோடியில் 510 தொழிலாளா்கள் தங்கும் வகையில் விடுதிகள் முதல் கட்டமாக விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையம் சாா்பில் பயனாளிகள் 9 பேருக்கு தொழில் தொடங்கவும், மானிய நிதியாக ரூ. 5.40 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினாா்.

இதில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளா் அருண்ராய், தொழில் வணிக ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநா் மதுமதி, மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூா் ஒன்றியக் குழு தலைவி ஜெயசீலி ஜெயபாலன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT