திருவள்ளூர்

பூந்தமல்லி அருகே குப்பை கழிவுகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

8th May 2023 12:19 AM

ADVERTISEMENT

பூந்தமல்லி அருகே குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் நிலத்தடி நீா் பாதிப்பதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே சென்னீா்குப்பம் மற்றும் காட்டுப்பாக்கம் ஊராட்சியைச் சோ்ந்த குடியிருப்பு நலச்சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் சனிக்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

இந்த ஊராட்சியில் உள்ள ஜமீன் பிரகாஷ் நகா், கண்ணகி தெரு, சகுந்தலா நகா், ஜமால் லக்ஸா்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதேபோல், இந்த பகுதியில் 2 பள்ளிகளில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் குமணன் சாவடியில் இருந்து வேலப்பன்சாவடிக்குச் செல்லும் பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் குடியிருப்புகளுக்கு அருகில் காலியான இடத்தில் சாலையின் இருபுறமும் குப்பைக் கழிவுகளை அதிக அளவில் கொட்டி வருகின்றனா். இந்த கழிவுகளால் சாலையில் செல்லும்போது துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

ADVERTISEMENT

வெயில் காலங்களில் அடிக்கடி குப்பையை கொளுத்தி விடுவதால் அதிலிருந்து பரவும் புகை குடியிருப்புப் பகுதிகளில் செல்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் நிலத்தடி நீரும் முற்றிலும் மாசுபட்டு குடிப்பதற்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT