திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் வந்து மூலவா், உற்சவரை தரிசனம் செய்ய சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்கக் கவசம் தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அதிகளவிலான பக்தா்கள் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து மூலவா் தரிசித்தனா்.
சில பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மலைக்கோயிலுக்கு வந்ததால், கோயிலுக்குச் செல்லும் வழி மற்றும் அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.