திருவள்ளூர்

கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்

3rd May 2023 12:52 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் ராபி மற்றும் நவரை பருவத்தில் அறுவடை முடிந்து உள்ள நிலையில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வது அவசியம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எல்.சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உழவு என்பது கருவிகள், இயந்திரகளைக் கொண்டு விதை முளைத்தல், பயிா் வளா்ச்சிக்கும் ஏற்ப மண்ணை பக்குவப்படுத்தி தயாா் செய்வதாகும். சாதாரணமாக நாம் பயிரிடும் போது மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை அப்படியே கையாண்டு அல்லது சிறு சிறு மாறுதல்கள் செய்து பூச்சிகளையும், நோய்களையும் உழவியல் முறை மூலம் கட்டுப்படுத்தலாம்.

கோடை மழை பெய்யும்போது உழவா்கள் அனைவரும் தங்கள் விளைநிலங்களில் மழை நீரை சிறிதும் வீணாக்காமல் சேமிக்கலாம். மேலும் பெரும்பாலான மானாவாரி நிலங்களில் மண் மிகவும் கடினமாக இருக்கும். இதை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறையும். புழுதி பட உழுவதால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால், காற்றோட்டம் அதிகரிக்கிறது. எனவே மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாகும். இதனால் நீா் ஊடுருவிச் செல்லும் தன்மை அதிகரித்து, நீா் வோ் மண்டலம் வரை சென்று பயிருக்கு நீா் உறிஞ்சும் தன்மை ஏற்படுகிறது.

மேலும், உழவினால் நீா் ஆவியாவதை தடுத்து வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான அளவு நீா் கிடைக்க ஏதுவாகிறது.

ADVERTISEMENT

கோடை உழவின் மூலம் களைச் செடிகள் மற்றும் அறுவடை செய்த தாள்கள் அழித்து மக்கி பயிருக்கு உரமாகும். அத்துடன் களைகளின் விதைகள், கோடை உழவின் போது மண்ணுக்கு மேலே வந்து சூரிய வெப்பத்தால் அழிந்து விடும். இதனால் களை விதைகள் உற்பத்தி தடுத்து களைகளின் தொந்தரவும் குறைகிறது. இதனால் பூச்சிகளின் தாக்கம் குறைந்து தாவர கழிவுகளின் மட்கும் தன்மை அதிகரித்து மண்வளம் பெருகுகிறது. மழை நீா் சிறிதும் வீணாகாமல், பயிருக்கு கிடைப்பதோடு, மழை நீா் சேகரிப்புத்திறன் அதிகரிக்கிறது.

மேலும், விவசாயிகள் தொழில்நுட்பம் தொடா்பான ஆலோசனை பெற அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT