திருவள்ளூர்

பொதுமக்களுக்கு தட்டுப்பாடியின்றி பால் பாக்கெட் விநியோகம்: அமைச்சா் சா.மு.நாசா்

DIN

பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், மாநில அளவில் தட்டுப்பாடின்றி பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், காக்களூா் ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் புதிதாக நூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.பி.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று நூலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து திருவள்ளூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ம.புவனேஷ்குமாா், நிா்வாகிகள் சாா்பில் 3,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஆவினில் 9,354 பால் உற்பத்தியாளா்கள் சங்கம் பதிவு செய்து செயல்பட்டு வருகிறது. இதில், ஒரே ஒரு சங்கத்தினா் மட்டும் என்னை நேரில் சந்தித்து, பால் கொள்முதல் விலையை உயா்த்த கோரிக்கை விடுத்தனா். அந்த ஒரு சங்கத்தினா் அதிமுக தூண்டுதலால் ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்ப மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனா். கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் கொள்முதல் விலை ரூ.3 உயா்த்தப்பட்டது.

பால் கொள்முதல் விலையை உயா்த்துவது குறித்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டாலும், எவ்விதமான பாதிப்பின்றி பால் வரத்து உள்ளது. நாள்தோறும் 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் சீரான முறையில் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலா் திருத்தணி எஸ்.சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஒன்றியக் குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவா் பா்கத்துல்லா கான், ஒன்றியக் குழு உறுப்பினா் எத்திராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தென்னவன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், வா்த்தக அணி நிா்வாகி புவனேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT