சென்னையில் சுங்கத்துறை, மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 11 பேரிடம் ரூ. 61.50 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை, முகலிவாக்கம், சுலோச்சனா நகரைச் சேர்ந்தவர் மோகன் (62). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இதற்கிடையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மோகன், தனது மகனுக்கு அரசு வேலை தேடி வந்தார். அப்போது, சாலிகிராமம், சத்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (55), குன்றத்தூர், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சக்திவேல் (49), சிந்தாதிரிப்பேட்டை, சுங்குவார் தெருவைச் சேர்ந்த விஷ்வேஸ்வரன் (32) ஆகிய 3 பேரும் சேர்ந்து, சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். இதை நம்பிய மோகன் அவர்கள் கேட்ட ரூ. 13 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதன் பிறகு, அவர்கள் சுங்கத்துறையில் பணியில் சேருவதற்கான நியமன ஆணையை கொடுத்துள்ளனர். அதை மோகன் விசாரித்த போது, போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதையடுத்து, மோகன் பணத்தை திரும்பக் கேட்ட போது, அவர்கள் 3 பேரும் கொடுக்க மறுத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மோகன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
ஆணையர் ஏ.அருண் புகாரை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் மைனர்சாமி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சதீஷ், சக்திவேல், விஷ்வேஸ்வரன் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், மோகனிடம் பண மோசடி செய்தது மட்டுமன்றி, மேலும் 10 பேரிடம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததும், மொத்தம் ரூ. 61.50 லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திங்கள்கிழமை இரவு புழல் சிறையில் அடைத்தனர்.