திருவள்ளூா் அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் மோதியதில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நின்றிருந்த பெண் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே வலசைவெட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்த மணியின் மனைவி துளசி (58). இவா் திருவள்ளூா் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மாலை நின்றிருந்தாராம். அப்போது, திருவள்ளூரிலிருந்து பெரும்புதூா் நோக்கிச் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. அப்போது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த துளசி மீது மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இரு சக்கர வாகனத்தில் வந்த கம்மவா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (48), சுதானந்தம் (35) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்து வந்த மணவாளநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயம் அடைந்தவா்களை வானகரம் பகுதியில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இது குறித்து துளசியின் மகன் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், மணவாள நகா் போலீஸாா், தப்பியோடிய காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.