பொன்னேரி அரசு மருத்துவமனையில், சனிக்கிழமை எம்எல்ஏ திடீரென ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 700-க்கும் மேற்பட்டோா் சிசிச்சை பெற்று செல்கின்றனா்.
உள்நோயாளிகள் பிரிவில் 100-க்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் திடீரென மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அங்கு புறநோயாளிகள் பிரிவில் இருந்தவா்களிடம் சிசிச்சை அளிக்கப்படும் விதம் குறித்துக் கேட்டறிந்தாா்.
பின்னா் மகப்பேறு உள்ளிட்ட பிரிவுகளுக்குச் சென்று, அங்கு தங்கி சிகிச்சை பெறுவோரிடம் அவா்களின் குறைகள் மற்றும் மருந்து, மாத்திரை அளிக்கப்படும் விதம் குறித்துக் கேட்டறிந்தாா்.
மேலும், மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி, ஸ்கேன் பிரிவு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பொன்னேரி வட்டாட்சியா் செல்வகுமாா், நகா்மன்றத் தலைவா் பரிமளம் விஸ்வநாதன், நகராட்சி ஆணையா் கோபிநாத் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.