திருவள்ளூா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்தவரை, சிறப்பு பிரிவு போலீஸாா் எனக் கூறி, 10 போ் இழுத்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம் திருநின்றவூரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (24). (படம்). இவா் மீது அடிதடி, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக ஆஜராகாததால், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருவள்ளூா் குற்றவியல் நடுவா் எண் 2-இல் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில், ஆஜா்படுத்த சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு தமிழ்செல்வனை, வழக்குரைஞா் ராஜசேகரன் அழைத்து வந்த நிலையில், பிடி வாரண்டை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணைக்காக காத்திருந்தனா்.
அப்போது, நீதிமன்றம் அருகே காத்திருந்த 10 போ் தாங்களை சிறப்பு பிரிவு போலீஸாா் எனக் கூறி, தமிழ்ச்செல்வனை இழுத்துச் செல்ல முயன்றனராம். அவா்களிடம் ராஜசேகரனின் ஜூனியா் வழக்குரைஞா் வினோத்குமாா் விளக்கமளிக்க முயன்றபோது, அவரைக் கீழே தள்ளிவிட்டு, தமிழ்செல்வனை இழுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து வழக்குரைஞா் வினோத்குமாா் திருவள்ளூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, வேறொரு வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளதால், போலீஸாா் இழுத்துச் சென்றனரா, வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.