திருவள்ளூர்

தண்டவாளத்தில் மரத்துண்டு: போலீஸார் தீவிர விசாரணை

DIN

ஆவடி அருகே தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரத்துண்டு ரயில் என்ஜினில் சிக்கியது.
 பயணிகள் ரயிலை கவிழ்க்க சதியா என ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு செல்லும் ரயில் வழித்தடத்தில் தினமும் விரைவு, சரக்கு, மின்சார ரயில்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பணிகளுக்காகச் சென்று வருகின்றனர்.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அரக்கோணத்தில் இருந்து ஆவடிக்கு ரயில் என்ஜின் வந்து கொண்டிருந்தது. இதை ஓட்டுநர் மதியழகன் இயக்கினார்.
 இந்த என்ஜின் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்கு இடையே வந்தபோது, தண்டவாளத்தில் 5 அடி நீளமுள்ள தென்னை மரத்துண்டு ஒன்று கிடந்தது.
 இதைப் பார்த்த ஓட்டுநர் மதியழகன், ரயில் என்ஜினை நிறுத்த முயன்றார். அதற்குள் மரத்துண்டு ரயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கியது. பின்னர், ரயில் என்ஜினை நிறுத்திய ஓட்டுநர், அந்த மரத் துண்டை எடுத்து, என்ஜினில் போட்டுக் கொண்டு, ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தார்.
 இது குறித்து ரயில்வே அதிகாரிகள் அண்ணனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் செய்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதில், திருநின்றவூர் நேரு நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (58) என்பவர், வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டி, அதை துண்டுகளாக்கி ரயில் தண்டவாளத்தை ஒட்டி உள்ள காலி இடத்தில் போட்டுள்ளார்.இதற்கிடையில் நள்ளிரவு அதில் ஒரு மரத்துண்டை மர்ம நபர்கள், தண்டவாளத்தில் எடுத்துப் போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது.
 ரயில்வே பாதுகாப்புப் படையினர் செந்தில்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னை ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
 இதில், தண்டவாளத்தில் மரத்துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீஸார் 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT