திருவள்ளூர்

வணிக வளாகங்களில் வசூலிக்கப்பட்ட ரூ.35 லட்சத்துடன் வேனில் தப்பிய ஓட்டுநர் கைது

8th Jun 2023 02:46 AM

ADVERTISEMENT

சென்னையில் வணிக வளாகங்களில் வசூலிக்கப்பட்ட ரூ.35 லட்சத்துடன் வேனில் தப்ப முயன்ற ஓட்டுநரை ஜி.பி.எஸ். கருவி மூலம் ஊழியர்களே விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணத்தை வசூல் செய்வது, ஏடிஎம் எந்திரங்களில் பணத்தை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கவனித்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிறுவனத்தின் ஊழியர்கள் வேனுடன் சென்னையின் பல இடங்களில் பணத்தை வசூலித்து விட்டு, மதியம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3-ஆவது பிரதான சாலைப் பகுதிக்கு வந்தனர்.
 பின்னர், ஊழியர் ரமேஷ் என்பவர் வேனில் இருந்து இறங்கி அங்குள்ள வணிக நிறுனங்களில் பணத்தை வசூலிக்க சென்றார். அப்போது, வேனுக்கு அருகில் காவலாளி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
 பின்னர், திடீரென்று வசூலித்து வைத்திருந்த ரூ.35,52,848 பணத்துடன் ஓட்டுநரான கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அமீர்பாஷா (46) வேனை ஓட்டிக் கொண்டு தப்பிச் சென்றார்.
 இதைப் பார்த்த காவலாளி, ஊழியர் ரமேஷிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் உடனடியாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
 இதன் பிறகு, அவர்கள் வேனில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம், வேன் மாதவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். பின்னர், நிறுவன ஊழியர்கள் அதே நிறுவனத்தில் மாதவரம் மண்டல அலுவலகம் அருகே வேனை மடக்கி பணத்தைத் திருடி கொண்டு தப்ப முயன்ற ஓட்டுநர் அமீர்பாஷாவை பிடித்தனர்.
 இதையடுத்து, ஊழியர்கள் வேனில் இருந்த பணத்தை மீட்டு, வங்கிகளில் நிரப்பி விட்டு, அமீர் பாஷாவை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 பின்னர், நிறுவன உதவி மேலாளர் பாரத் (36) கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருவள்ளுவர் தலைமையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அமீர்பாஷாவை கைது செய்து, புதன்கிழமை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT