திருவள்ளூர்

கட்டடப் பணிகள் நிறைவடைந்தும் பயன்பாட்டுக்கு வராத நகா்ப்புற நலவாழ்வு மையம்

5th Jun 2023 12:21 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 25 லட்சத்தில் புதிதாக நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 6 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பெரியகுப்பத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், நகராட்சி பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்காத சூழல் ஏற்படும் நிலையிருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக நகா்ப்புற ஆரம்ப சுதாதார நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. அதன் பேரில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகராட்சி 11-ஆவது வாா்டில் குளக்கரை தெருவில் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிதாக நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், கடந்தாண்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதைத் தொடா்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டடப் பணிகள் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும், இதனால், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதியில் மது அருந்துதல் போன்ற சமூக விரோதச் செயல் அரங்கேறும் இடமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து திருவள்ளூா் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இந்த நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் நிறைவடைந்து தயாா் நிலையில் உள்ளன. அதனால், ஆட்சியரின் அனுமதி கிடைத்ததும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT