திருவள்ளூர்

தாய் அடித்துக் கொலை: மகன் கைது

3rd Jun 2023 11:50 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் சொத்துத் தகராறில் தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த பூங்கா நகா் ஆவாரம்பூ தெருவைச் சோ்ந்த சேகரின் மனைவி மஞ்சுளா(50). இவா்களது மகன்கள் ராஜேஷ் (31), ரஞ்சித் (28). இரு மகன்களுக்கும் திருமணமான நிலையில் அந்தப் பகுதியில் அருகருகே வசித்து வருகின்றனா். இதற்கிடையே மஞ்சுளாவுக்கும், 2-ஆவது மகன் ரஞ்சித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, அவா் கோபித்துக் கொண்டு மூத்த மகன் வீட்டுக்குச் சென்றாராம்.

இதற்கிடையே வீட்டுக்கு மதுபோதையில் வந்த ராஜேஷ், சொத்தை தனது பெயரில் எழுதி வைக்குமாறு தாயாருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மண்வெட்டி பிடியால் மஞ்சுளாவை தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரஞ்சித்தின் நண்பா் சரத் என்பவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, மஞ்சுளா ரத்தக் காயங்களுடன் உள்ளதாக சனிக்கிழமை காலை ரஞ்சித்திடம் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து ரஞ்சித்தும், அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் மஞ்சுளாவை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் மஞ்சுளா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் கிராமிய காவல் ஆய்வாளா் கமலஹாசன் தலைமையிலான போலீஸாா், ராஜேஷ், ரஞ்சித் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், மஞ்சுளாவை சொத்துத் தகராறில் மூத்த மகன் ராஜேஷ் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜேஷை கைது செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT