திருவள்ளூர்

மனிதக் கழிவுகள் அகற்றம்: விழிப்புணர்வுக் கூட்டம்

1st Jun 2023 03:27 AM

ADVERTISEMENT

ஆவடியில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றத் தடை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 ஆவடி மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013, கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் பயன்பாடு, உரிமம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
 மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் முகமது சபீபுல்லா, உதவி செயற்பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 
 கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கழிவுநீர் வாகனங்கள் அரசு விதிகள்படி தகுதி சான்று போன்ற விவரங்கள், உரிமைக் கட்டணம் ரூ.2,000 செலுத்தி உரிமை பெற்றிருக்கவும், கழிவுநீர் அகற்றும் வாகன இயக்கத்தைக் கண்காணித்திட ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்.
 வாகனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ரூ.10 லட்சத்துக்கு தனி நபர் விபத்துக் காப்பீடு செய்திருக்கவும், பணியாளர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்கக் கூடாது, இயந்திரங்களைக் கொண்டுதான் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
 சேகரிக்கப்படும் கழிவுநீரை கோவர்த்தினகிரி மற்றும் அண்ணனூர் பகுதியிலுள்ள கழிவுநீர் அகற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று அகற்றவும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் யாரும் கழிவுநீர் தொட்டில் இறங்க தடை உள்ளது.
 அதை மீறி பணி செய்வது தெரிய வந்தால், அந்த கட்டட உரிமையாளருக்கு அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
 மேலும், கூட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் உள்ளது என்று அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 நிகழ்வில், மாநகராட்சி தூய்மைப் பணி அலுவலர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், முகைதீன், மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள், தூய்மைப் பணி ஆய்வாளர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தனியார் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT