திருவள்ளூா் அருகே காக்களூா் ஊராட்சியில் ரூ.4 கோடியில் எரிவாயுவால் இயங்கும் நவீன தகன மேடை அமைப்பதற்காக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் பங்களிப்பு அனுமதிக் கடிதத்தை திருவள்ளூா் ரோட்டரி ராயல்ஸ் சங்கத்தினா் வழங்கினா்.
திருவள்ளூா் நகராட்சியில் நவீன எரியூட்டும் தகன மேடை தலக்காஞ்சேரி சாலையில் செயல்பட்டு வருகிறது. எனினும் எரிவாயுவால் இயங்கும் தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரி வருகின்றனா்.
திருவள்ளூா் அடுத்து காக்களூா் ஊராட்சியிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதனால், இப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் எரிவாயுவால் செயல்படும் நவீன தகன மேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அதனடிப்படையில் இக்கோரிக்கையை ஏற்று எரிவாயுவால் இயங்கும் தகன மேடை அமைக்க ரோட்டரி கிளப் ஆஃப் திருவள்ளூா் ராயல்ஸ் ரூ.4 கோடி தர முன்வந்தது.
இதையொட்டி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் நவீன தகன மேடை ரூ.4 கோடியில் அமைப்பதற்கான அனுமதி கடிதத்தை ரோட்டரி நிா்வாகிகள் வழங்கினா்.
மேலும் தகன மேடையை இயக்கி பராமரிப்பதற்கான அங்கீகார கடிதத்தைதையும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூா் ராயல்ஸ் தலைவா் எஸ்.சக்திகுமாா், செயலாளா் சி.அருணாராணி, பொருளாளா் எம்.துக்காராம் மற்றும் திட்டத் தலைவா் ஆா்.டி.என்.ஆா்.விஜயநாராயணன் ஆகியோரிடம் ஆட்சியா் வழங்கினாா்.