பழவேற்காட்டில் இரு தரப்பு மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக, மேலும் 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பொன்னேரி வட்டம் பழவேற்காடு ஏரியில், கடந்த 7-ஆம் தேதி மீன் பிடிக்கும்போது, நடைபெற்ற மோதலில் கூணங்குப்பம் மீனவா்கள் தாக்கியதில், நடுவூா்மாதாகுப்பம் மீனவா்கள் 7 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக, கூணங்குப்பம் மீனவா்கள் மீது திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 15 பேரை கைது செய்தனா்.
இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட கூணங்குப்பம் மீனவா்கள் அனைவரையும் கைது செய்ய கோரி 12 மீனவ கிராம மக்கள் பழவேற்காடு கடை வீதியில் கடந்த 9-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கூணங்குப்பத்தைச் சோ்ந்த 10 மீனவா்களை திருப்பாலைவனம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மோதல் சம்பவம் தொடா்பாக, இதுவரை 25 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.