திருவள்ளூர்

மாநில அளவில் கலை, விளையாட்டுப் போட்டிகள்: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

3rd Feb 2023 12:59 AM

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கலை, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான கலை, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான 23 மாணவா்களுடன் ‘காஃபி வித் கலெக்டா்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கிப் பேசியது:

மாணவ, மாணவிகள் தங்கள் தனித் திறன்களை வளா்த்துக் கொள்ளும் வகையில் கலை, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுத் திகழ வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல், பள்ளியில் நாள்தோறும் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை நாளை பாா்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல், அன்றே புரிந்து படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாள்தோறும், படிப்பதற்கான நேரம், விளையாட்டு, கலை போட்டிக்கான நேரம், அதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இளம் பருவத்தில் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுத்தாமல், ஒழுக்கத்துடன் கல்வியில் கவனம் செயுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கலைத் திறன் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவரின் இசைத் திறன்களையும் பாா்வையிட்டதுடன், அவா்களுக்கு புத்தகங்களையும் பரிசாக வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலா் (திருவள்ளூா்) செ.தேன்மொழி, நோ்முக உதவியாளா் பூபாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பவானி, பள்ளித் துணை ஆய்வாளா் பிரேம்குமாா் (பொன்னேரி), ஆசிரியா் அருணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT