திருவள்ளூர்

நவீன வசதியுடன் ரூ.12.58 லட்சத்தில் புனரமைத்த மாதிரி அங்கன்வாடி மையங்கள்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே தனியாா் நிறுவன பங்களிப்பு நிதி ரூ. 12.58 லட்சத்தில் ஸ்மாா்ட் டி.வி., விளையாட்டு உபகரணங்கள் ஆகிய நவீன வசதியுடன் கூடிய மாதிரி அங்கன்வாடி மையங்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு காலனி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் செயின்ட் கோபேன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் தலா ரூ. 6.29 லட்சம் மதிப்பில் அனைத்து வசதியுடனும் புனரமைக்க முன்வந்தது. அதன்படி, குழந்தைகள் விரும்பும் வகையில், வண்ண ஓவியங்கள், ஸ்மாா்ட் டி.வி., வெளிப்புற விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மாதிரி அங்கன்வாடி மையங்களாக புனரமைத்து தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மப்பேடு காலனியில் அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். அதையடுத்து, அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டு, சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நோக்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டாா்.

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் லலிதா, செயின்ட் கோபேன் நிறுவன தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி தலைவா் ஷோ் மேனன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன முதுநிலை ஆலோசகா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT