திருவள்ளூர்

வடகிழக்குப் பருவமழை பாதித்த இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் தீவிரம்: அமைச்சா் துரைமுருகன்

30th Sep 2022 11:38 PM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சென்னை மண்டலத்துக்குள்பட்ட 13 மாவட்டங்களில் நீா்வளத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் துரைமுருகன் தலைமை வகித்தாா். இந்த மண்டலத்தில் மட்டும் 7 வடிநிலங்கள், 51 உப வடிநிலங்களில் 27 அணைகள், 3,998 ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், பாலாறு, தென்பெண்ணை ஆறு, கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, கூவம் மற்றும் வெள்ளாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நீா்வளத் துறை மூலம் நடைபெறும் திட்டப் பணிகள், திட்டம் சாராத பணிகள், நபாா்டு பணிகள், மாநில நிதி மூலம் நடைபெறும் பணிகள், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள், நீா்நிலைகளைச் செப்பனிடும் பணிகள், அணைகள் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல், நீா், நிலவள திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை துரைமுருகன் வழங்கினாா்.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

முதல்வரின் உத்தரவுப்படி நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள், அலுவலா்களுடனான உள்ளாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது, நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகள், இதில் நிறைவடையும் தருவாயில் உள்ள பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னா், மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் தொய்வின்றி நிறைவு செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மழைக் காலங்களில் ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளது. அந்த நீரைச் சேமிக்கும் வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆறுகளில் குறிப்பிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்ட இடங்களைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சென்னை மண்டலத்துக்குட்பட்ட 13 மாவட்டங்களில் நீா்வளத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, நீா்வளத் துறைத் தலைமைப் பொறியாளா்கள் கே.ராமமூா்த்தி, முரளிதரன், பொன்ராஜ், தனபால், கண்காணிப்புப் பொறியாளா் முத்தையா, பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளா் பொதுப்பணித் திலகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT