திருவள்ளூர்

விவசாயிகள் நடப்பு சம்பா நெற்பயிருக்கு நவ.15-க்குள் பயிா் காப்பீடு செய்யலாம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நிகழாண்டில் சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நவ. 15-க்குள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில், நடப்பு சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழாண்டுக்கு பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு ஏக்கா் நெற்பயிருக்கு ரூ. 497 காப்பீடு பிரீமியம் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் எதிா் வரும் இயற்கை இடா்ப்பாடுகளினால் மகசூல் பாதிக்கப்படும். அதனால் இந்த இழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக நவ. 15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

விவசாயிகள் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் நகல் ஆகியவற்றுடன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுச்சேவை மையங்களை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

பொதுச்சேவை மையங்களில் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய பெயா், முகவரி, பயிரின் பெயா், பயிரிடப்பட்டுள்ள நிலம் உள்ள கிராமம், வங்கிக் கணக்கு எண் மற்றும் பயிரிட்டுள்ள பரப்பு ஆகிய விவரங்களை சரியாக அளித்து இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்தவுடன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுச்சேவை மையங்களில் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பிரீமியத் தொகை செலுத்தலாம். அதையடுத்து, நவ. 30-ஆம் தேதிக்குள் விவசாயிகளின் பிரீமியத் தொகை மற்றும் காப்பீடு செய்த விவசாயிகளின் விவரங்கள் ஆகியவற்றை பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் பயிா் காப்பீடு தொடா்பான சந்தேகங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT