திருவள்ளூர்

மெட்ரோ ரயில் பணியின்போது மாநகரப் பேருந்து மீது உடைந்து விழுந்த கம்பிகள்: 3 பேர் காயம்

28th Sep 2022 02:55 AM

ADVERTISEMENT

சென்னை, ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணியின்போது கிரேன் உடைந்து கம்பியுடன் மாநகரப் பேருந்து மீது விழுந்த விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் குன்றத்தூர் மாநகரப் பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு மாநகரப் பேருந்து ஒன்று ஆலந்தூர் பணிமனைக்குச் சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் அய்யாதுரை (52) பேருந்தை ஓட்டினார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக தூண்கள் அமைக்க 30 அடி நீளமுள்ள கம்பிகளை ராட்சத கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது கிரேனின் ஒரு பகுதி உடைந்ததில், 30 அடி நீளமுள்ள கட்டப்பட்ட கம்பிகள் மாநகரப் பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தை ஓட்டி வந்த அய்யாதுரை, போக்குவரத்து ஊழியர் பூபாலன் (45), கிரேன் ஆபரேட்டர் ரஞ்சித்குமார் (34) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பேருந்தின் மீது கிரேனுடன் கம்பிகள் விழுந்ததால், அதில் பயணம் செய்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.
காயமடைந்தவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற ஊழியர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தினர். மெட்ரோ ரயில் பணித் திட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரித்தனர். புகாரின் அப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT