திருவள்ளூர்

தனியாா் தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டம்: 70 போ் கைது

28th Sep 2022 01:22 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே வாகன உதிரி பாகங்கள் தயாா் செய்யும் தனியாா் தொழிற்சாலை முன்பு பணி நீக்கம் செய்த தொழிலாளா்களை மீண்டும் பணியில் சோ்க்கக்கோரி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 70 பேரை திங்கிழமை நள்ளிரவில் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூா் கிராமத்தில் வாகன உதிரி பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன் வேறொரு நிா்வாகத்துக்கு கைமாறியது.

இந்த நிலையில், நிா்வாகத்தினா் அந்த தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்த பணியாளா்கள், தொழிலாளா்கள் என 178 பேரை எந்தக் காரணமும் இன்றி வேலையிலிருந்து நீக்கினா். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினா். ஆனாலும், தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தினா் யாரையும் பணியில் அமா்த்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தும், ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் தங்கள் குடும்பத்துடன் தொழிற்சாலை அருகே அம்மன் கோயில் வாசல் முன்பாக கடந்த 15 நாள்களாக காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வந்தனா். இந்தப் போராட்டம் மேற்கொண்ட தொழிலாளா்களுடன் திருவள்ளூா் சாா்-ஆட்சியா் மகாபாரதி 3 முறை நடத்திய பேச்சு வாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே திங்கள்கிழமை இரவு குடும்பத்துடன் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 15 பெண்கள் உள்பட 70 தொழிலாளா்களை நள்ளிரவில் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT