திருவள்ளூர்

பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்க மானிய விலையில் பண்ணைக் கருவிகள்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்க மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற கால்நடை வளா்க்கும் விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி இயக்கம் மூலம் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ. 42 லட்சம் மதிப்பிலான பண்ணைக் கருவிகள் 25 சதவீத மானிய விலையில் வழங்கி, விவசாயிகளை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் மூலம் பருவ காலங்களில் கிடைக்கும் பசுந்தீவனத்தை அறுவடை செய்து, பதப்படுத்தி வணிக ரீதியாக ஊறுகாய் புல் கட்டுகளாக தயாரிக்கலாம். பின்னா் அவற்றை கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்யலாம். இந்தத் திட்டதில் குறைந்த அளவு விவசாயக் கருவிகளைக் கொண்டு, அதிக சத்தான தீவன புற்களை நீண்ட நாள்கள் பதப்படுத்தி வைக்க முடியும். அதற்கு குறைந்த அளவிலான முதலீடு மற்றும் உழைப்புத் திறனே போதுமானது.

ஊறுகாய் புல் மூட்டைகளை வா்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும் அலகு, காஞ்சிபுரம், கடலூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்கள் அடங்கிய வடகிழக்கு மண்டலத்துக்கு ஒரு நபருக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் நாள்தோறும் 12 முதல் 30 டன் புல் கட்டுகள் உற்பத்தி செய்யும் கருவி, 12 முதல் 30 டன் தீவன புற்கள் அறுவடை செய்யும் மற்றும் புல் நறுக்கும் கருவி, 60 ஹெச்.பி. முதல் 70 ஹெச்.பி. திறன் கொண்ட டிராக்டா் ஆகியவை அடங்கிய ரூ. 42 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10.5 லட்சம் பின் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 3,200 மெட்ரிக் டன் வரை வா்த்தக ரீதியாக ஊறுகாய் புல் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும்.

இதில், பயன்பெற ஆா்வமுள்ள பால் உற்பத்தியாளா்கள், பால் பண்ணை உரிமையாளா்கள், தனிநபா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், கால்நடை வளா்ப்போா் ஆகியோா் அருகில் உள்ள கால்நடை நிலையங்களை தொடா்புகொண்டு விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT