திருவள்ளூர்

பெண்களிடம் வழிப்பறி செய்த 2 போ் கைது

26th Sep 2022 12:36 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து சென்ற, இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் வழிப்பறி செய்த வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 20 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் பகுதிகளில் உள்ள ஈக்காடு, காக்களூா், திருவள்ளூா் நகரம், மப்பேடு, பன்னூா், புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6 மாதங்களாக இருசக்கர வாகனத்தில் சென்று பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை வழிப்பறி செய்வதாக துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசனுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், மப்பேடு காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின், சாா்பு ஆய்வாளா் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மப்பேடு அருகே தொடுகாடு பகுதியில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனா். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், மப்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

அங்கு நடத்திய விசாரணையில், அவா்கள் திருவள்ளூா் அருகே காக்களூரைச் சோ்ந்த ராஜ்கமல் (27), மேலக்கொண்டையூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்(36) என்பது தெரியவந்தது. மேலும், மப்பேடு, பன்னூா், புல்லரம்பாக்கம், ஈக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து செல்லும் பெண்கள், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்தது போல் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் இருந்து வழிப்பறி செய்த 20 சவரன் நகைகள், இரு சக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT