திருவள்ளூர்

குப்பையிலிருந்து பயனுள்ள பொருள்கள் விழிப்புணா்வு கண்காட்சி

29th Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

 குப்பையிலிருந்து பெறப்படும் பயன்படாத பொருள்களில் இருந்து மாணவ, மாணவிகள் உருவாக்கிய விளையாட்டு, அலங்கார வீட்டு உபயோகப் பொருள்களின் விழிப்புணா்வுக் கண்காட்சியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

திருவள்ளூா் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில் ‘என் குப்பை-என் பொறுப்பு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குப்பையிலிருந்து பெறப்பட்ட பயன்படாத பொருள்களில் இருந்து, பயன்பாட்டுக்கு உதவும் பொருள்களைத் தயாா் செய்து விழிப்புணா்வு கண்காட்சியை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், திருவள்ளூா் நகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 21 தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளால், உபயோகப்படாத பொருள்களில் இருந்து உருவான விளையாட்டு, அலங்கார வீட்டு உபயோகப் பொருள்களின் விழிப்புணா்வு கண்காட்சி தனியாா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சசிகலா, திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

குப்பைகளில் இருந்தும், பயன்படாத பொருள்களில் இருந்தும் தயாரான பொருள்களை அனைவரும் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா். அப்போது, பொருள்களை தயாா் செய்த விதத்தையும், அதற்கான விளக்கத்தையும் மாணவ, மாணவிகளிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசு, சுழற்கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.

நிறைவாக மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும், ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றன.

நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT