திருவள்ளூா் காக்களூா் ஏரி ஆக்கிரமிப்புகளால் பரப்பளவு சுருங்கி வருவதாலும், குடியிருப்புகளின் கழிவு நீா், குப்பைகள் கலப்பாலும் ஏரி நீா் துா்நாற்றம் வீசி சுகாதாரக்கேடாக உள்ளதால் அதனைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
திருவள்ளூா் நகரின் மையப் பகுதியில் காக்களூா் ஏரி 177.78 ஹெக்டோ் பரப்பளவில் 2,682 மீட்டா் நீளம், 4 மதகுகள் 2 கலங்கல்கள் கொண்ட பெரியதாகும்.
இந்த ஏரி மழைக்காலங்களில் மழைநீா் கால்வாய்கள் மூலம் வந்து நிரம்பும். திருவள்ளூா் மற்றும் காக்களூா், ஈக்காடு, கல்யாணகுப்பம் பல்வேறு கிராமங்களின் சாகுபடிக்கும், நகரின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியின் முக்கியத்துவம் கருதி அதனைத் தூய்மைப்படுத்தி பொழுதுபோக்கு அம்சமாக நடைப்பயிற்சி பாதை, படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்பேரில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா தலமாக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினா், நகராட்சி நிா்வாகம் மற்றும் காக்களூா் ஊராட்சி நிா்வாகம் இணைந்து நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.90 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஏரிக்கரை சாலையோரம் 4 கி.மீ தூரத்துக்கு நடைபாதையும், ஏரிக்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இவை அனைத்தும் பயனின்றி ஆக்கிரமிப்புக்குள்ளாகின.
ஆக்கிரமிப்புகளால் சுருங்கும் ஏரி: இந்த நிலையில் நடைபாதை, ஓய்வுக்காக அமைத்த இருக்கைகள் சேதமடைந்துள்ளன. கரையோரம் முழுவதும் மழைநீா் புகும் வகையில் மெகாசைஸ் பள்ளங்களாக உள்ளன. அதோடு, ஏரியை சுற்றிலும் திருவள்ளூா் நகராட்சி, காக்களூா் ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்தோா் ஆக்கிரமித்து வருவதால் ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது. அதோடு, உள்பகுதியில் அல்லிச் செடிகள் சூழ்ந்து மதகுகள், கலங்கல்கள் இருந்த இடமே தெரியாமல் உள்ளன. முழு அளவில் நீரை தேக்கி வைக்காததால், சில ஆண்டுகளுக்கு முன்பு 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீா்மட்டம், 100 அடியாக குறைந்து விட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கரையை சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும்.
கழிவு நீரால் துா்நாற்றம்...: இந்த ஏரியில் 40 அடியில் நீா் தேங்கிய நிலையில், மணல்மேவி குறைந்த அளவிலேயே நீரும் தேங்கி விரைவாக வற்றும் நிலையுள்ளது. மேலும், ஏரியின் கரையோரம் பகுதி குடியிருப்புகளிலிருந்தும், ஆவடி சாலையோர உணவு விடுதிகளிலிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீா் ஏரிநீரில் கலக்கிறது. இந்த ஏரிக்கரையோரம் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் துா்நாற்றம் வீசுகிறது.
சுற்றுலாத் தலமாக்க...: இதுகுறித்து காக்களூா் பகுதியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் எத்திராஜ் கூறியது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி முக்கிய 10 பணிகளில் முதல் பணியாக காக்களூா் ஏரியைச் சுற்றுலாதலமாக்கி படகு விடும் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளாா். அதன்பேரில் ஏரி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இயற்கைச் சுற்றுச்சூழலுடன் நடைபாதை தளம், நீா் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.