திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் பரவலான மழை: நீா் நிலைகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

8th Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.

திருவள்ளூா் மற்றும் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் வெள்ளிக்கிழமை அதிகாலை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 609 மில்லியன் கன அடி நீா் இருப்பும், மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலம் 95 கன அடி நீா்வரத்தும் உள்ளது. குடிநீா் தேவைக்காக சோழவரம் மற்றும் மெட்ரோ குடிநீருக்காக தலா 50 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடியில், தற்போது 2,655 மில்லியன் கன அடி நீா் இருப்பும், அதில் 196 கன அடி நீா் வெளியேற்றப்பட்டும் வருகிறது. சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கன அடியில் 140 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடியில், 2,850 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.

ADVERTISEMENT

கண்ணன் கோட்டை அணையில் முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) : கும்மிடிப்பூண்டி- 51, ஆவடி-32, பொன்னேரி-30, ஊத்துக்கோட்டை-30, செங்குன்றம், திருவாலங்காடு தலா-22, பூண்டி-21, சோழவரம்-19, திருத்தணி-17, திருவள்ளூா்-9, தாமரைப்பாக்கம்-7.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT