திருவள்ளூர்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி பெற விண்ணப்பிக்கலாம்

6th Oct 2022 02:48 AM

ADVERTISEMENT

சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஆதரவற்ற குழந்தைகள், இயற்கைப் பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குடும்பத்தைச் சேர்ந்தோர் நிதி ஆதரவு பெற விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கீழ்குறிப்பிட்ட வகையிலான குழந்தைகளின் குடும்பத்தைச் சேர்ந்தோர் நிதி ஆதரவு உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் "MISSION VATSALYA" திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கணவரால் கைவிடப்பட்டோரின் குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்து பாதுகாவலர் பொறுப்பில் உள்ள குழந்தைகள், பொருளாதார, உடல் ரீதியாக குழந்தைகளைப் பராமரிக்க இயலாத நிலையிலுள்ள பெற்றோரின் குழந்தைகள்,  இளைஞர் நீதிச் சட்டம் 2015-இன்படி பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், குழந்தை தொழிலாளராக, திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட அல்லது கடத்தப்பட்ட குழந்தைகள், HIV/AIDS நோயால் பாதித்த குழந்தைகள், காணாமல்போன, வீட்டைவிட்டு வெளியேறிய, பிச்சை எடுக்கும் குழந்தைகள், தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகள், வன்முறைகளால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், சுரண்டல்களிலிருந்து மீட்கப்பட்ட ஆதரவு மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் குழந்தைகளாக இருக்க வேண்டும். 
இது போன்ற குழந்தைகளுக்கு கல்வி, தொழிற்கல்வி தொடர்ந்து பெற சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நிதி ஆதரவு, தற்காலிக பராமரிப்பு ஒப்புதல் வழங்கும் குழுவால் ஒப்பளிப்பு வழங்கிய தகுதியான குழந்தைகளுக்கு திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிதி உதவி பெறலாம். 
அந்த வகையில், பயனாளி குழந்தைகளுக்கு ஏப்.2022 முதல் மாதம் ரூ. 4,000 உதவித் தொகை பெறலாம். இந்த உதவி பெறுவதற்கு ஆண்டு வருமான வரம்பு கிராமங்களில் ரூ. 24,000 முதல் ரூ. 72,000-ஆகவும், மற்றும் நகரப் பகுதியாக இருந்தால் ரூ.36,000 முதல் ரூ. 96,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வருவாய் வரம்புக்கு உள்பட்ட மேற்கண்ட வகையிலான குழந்தைகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிதி ஆதரவு உதவி பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஜே.என்.சாலை, சாந்தி திருமணம் மண்டபம் அருகில், திருவள்ளூர்}602001 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்து 044 - 27665595, 6382613912 மற்றும் thirudcpo2@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT