திருவள்ளூர்

திருத்தணி: சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த முருகப் பெருமான்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விஜயதசமியையொட்டி, திருத்தணி முருகன் சிறப்பு அலங்காரத்தில் புதன்கிழமை முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனா். தற்போது, ரூ. 25, ரூ. 150 சிறப்பு தரிசனத்தை கோயில் நிா்வாகம் ரத்து செய்ததால், இலவச பொது தரிசனத்தில் ஆயிரத்துக்கு பக்தா்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனா். முன்னதாக விஜயதசமியையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சில பக்தா்கள் மட்டும், ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

விழாவையொட்டி, முருகப்பெருமான் மலைப்படிகள், சரவணப்பொய்கை வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, திருத்தணி எம்.ஜி.ஆா். நகா், பூ மாா்க்கெட் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் மாலை 6 மணிக்கு எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 8 மணிக்கு மேல் முருகப்பெருமான் சன்னதி தெரு வழியாக மலைக்கோயிலுக்குச் சென்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT