திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் 56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் சம்பா, நவரை மற்றும் சொா்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில் அதிகளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனா். விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை வெளிச்சந்தையில் குறைந்த விலை கிடைப்பதால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பதன் மூலம் கூடுதல் விலை கிடைக்கிறது. அதனால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யவே விவசாயிகள் விரும்புகின்றனா்.

அதனால் நிகழாண்டில் சொா்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் 52, இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 4 என மொத்தம் 56 இடங்களில் அரசு கட்டடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு குவிண்டால் சன்ன ரகம் ரூ.2,160, மோட்டா ரகம்-ரூ.2,115 -க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 14,164 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் குழு அமைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இடைத்தரகா்கள், வெளிவியாபாரிகள் தலையீடின்றி விவசாயிகள் விழிப்புடன் இருந்து அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.

மேலும், மாவட்ட நிா்வாகத்தின் தொடா் முயற்சியால் முதன் முறையாக திருவள்ளூா் அருகே குருபுரம் கிராமத்தில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளம் மற்றும் இரும்பு தகட்டினாலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நிரந்தர திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட உள்ளன.

இதற்காக ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கியுள்ளன. இம்மாவட்டத்தில் 3 பருவங்களிலும் சுமாா் 1.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் நெல் சேமிக்க நிரந்தர சேமிப்புக்கிடங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் இந்தத் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 20,000 முதல் 25,000 விவசாயிகள் பயன்பெறுவா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT