திருவள்ளூர்

வாக்காளா் பட்டியலில் ஆதாா் இணைப்பு: 100 % நிறைவு செய்தவா்களுக்கு பாராட்டு

3rd Oct 2022 11:15 PM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை 100 % நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை பாராட்டி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் சான்றிதழ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடமிருந்து 223 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

கூட்டத்தில் நிலம் தொடா்பாக-62, சமூகப் பாதுகாப்பு திட்டம்-33, வேலைவாய்ப்பு வேண்டி-29, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி-47, இதர துறைகள் தொடா்பாக - 52 என மொத்தம்-223 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியில் 100 சதவீதம் நிறைவு செய்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி மற்றும் பூந்தமல்லி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணியைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

சத்துணவுத் திட்டப் பணியின் போது காலமான பணியாளா்களின் வாரிசுகள் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளையும், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் மூலம் சுயதொழில் தொடங்க 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியமாக தலா ரூ.50,000 ஆயிரத்தை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சி.வித்யா (பொது), ஆா்.ஸ்ரீதா் (சத்துணவு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ப.மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சு.உதயம் மற்றும் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT