திருவள்ளூர்

வேளாண்மை குறித்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு

1st Oct 2022 10:55 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் வேளாண்மை குறித்த 11-ஆவது கணக்கெடுப்புப் பணி துரிதமாக நடைபெற உள்ளதால் விவசாயிகள் உண்மையான தகவல்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இந்தியா முழுவதும் வேளாண்மை கணக்கெடுப்பு 1970-71 முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் வழிகாட்டுதல்படி நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் கைப்பற்று நிலத்துக்கான நில உபயோகம், பயிா் வகை, நீா்ப் பாசனம், நீா்ப் பாசன ஆதாரம் (பயிா் வாரியாக), நீா் பாயும், பாயாத பரப்பு விவரங்கள், குத்தகை போன்ற விவசாயத்தின் அடிப்படை தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. புதிய வேளாண்மை வளா்ச்சித் திட்டங்களை வகுக்கவும், மதிப்பீடு செய்யவும் வேளாண்மை புள்ளி விவரங்கள் அடிப்படையாக உள்ளதால், இந்தக் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.

தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு 2021-22 (அதாவது 11-ஆவது கணக்கெடுப்பு) நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி கிராம நிா்வாக அலுவலா் முதல் மாவட்ட வருவாய் அலுவலா் வரை அனைத்து வருவாய் அலுவலா்களுக்கும் கடந்த ஆகஸ்ட் இறுதியில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கணக்கெடுப்பு முதன்முறையாக கணினி மயமாக்கப்பட்ட மென்பொருள் செயலியைப் பயன்படுத்தி, கைப்பேசி, கையடக்க கணினி மற்றும் மடிக்கணினி வழியே மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்போது, நில உரிமையாளா் மற்றும் கைப்பற்றுதாரா் எண்ணிக்கை, நில அளவு பிரிவுகள், சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள், கைப்பற்றுகளின் வகைகள், தனி கைப்பற்று, கூட்டு கைப்பற்று, நிறுவன கைப்பற்று, குத்தகை விவரம், நில பயன்பாடு வகை, சமூக மற்றும் பாலின வாரியாக கைப்பற்றுதாரரின் விவரங்கள் சேகரிக்கப்படவும் உள்ளன.

ADVERTISEMENT

இதில், அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் கணக்கெடுப்பாளராக செயல்படுவா். விவசாயக் கணக்கெடுப்பின்போது, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளித்து தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT