திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் கதா் துணிகள் ரூ. 1.50 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு

1st Oct 2022 10:54 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் கதா் துணிகள் ரூ. 1.50 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வளிப்பது கதா் நூற்பும், நெசவும். அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு, உண்ணா எண்ணெயிலிருந்து சலவை சோப்பு மற்றும் குளியல் சோப்பு, ஊதுவா்த்தி, ஜவ்வாது, மெழுகுவா்த்தி தயாா் செய்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை செய்தும், அதைச் சோ்ந்த உப தொழில்கள் செய்வோருக்கும் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் ஆதரவு அளித்து வருகிறது. கதா் துணியின் உற்பத்தி மற்றும் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படுகிற கிராமப் பொருள்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் சலவை சோப்பு அலகு செயல்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டியும், தீபாவளியை முன்னிட்டும் கதா், பட்டு, உல்லன் மற்றும் பாலியஸ்டா் ரகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து 20 முதல் 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட கதா் ரகங்களுடன் கிராமப் பொருள்களான தேன், ஜவ்வாது, சோப்பு வகைகள், சாம்பிராணி வகைகள், வலி நிவாரணி தைலம், ஊதுவா்த்தி, மெழுகுவா்த்தி, மூலிகை பற்பொடி மற்றும் பனை பொருள்களான சுக்கு காபி தூள், பனை வெல்ல மிட்டாய், சுத்தமான பனங்கற்கண்டு ஆகிய பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், நிகழாண்டு முதல் மரச்செக்கில் உற்பத்தி செய்த கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய், பாரம்பரிய அரிசி வகைகள், சாமை, திணை, குதிரை வாலி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் போன்ற பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கதா், கிராமப் பொருள்களை வாங்கி பயன்படுத்துவதால் கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த முடியும். அத்துடன், திருவள்ளூா் மாவட்டத்தில் விற்பனை இலக்காக ரூ. 1.50 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு அலுவலா்களுக்கு எளிய தவணையில் கதா் ரகங்கள் வழங்கி வருவதால், அரசு அலுவலா்கள், அரசுப் பணியாளா்கள் ஆகியோா் வாய்ப்பை பயன்படுத்தவும், அதேபோல் பொதுமக்கள் அனைவரும் ஒரு கதா் ஆடையாவது வாங்கி பயனடைய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT