திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக டிக்கெட்டுகள் மீண்டும் ஆன்லைனில் விநியோகம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யபட்டிருந்த அனைத்து வகை சேவைகளுக்கும் மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனா். சில பக்தா்கள், மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தோ், கேடயம் போன்ற சேவைகளை கட்டணம் செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனா்.

மேற்கண்ட அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தொடா்ந்து கரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து சேவைகள், அபிஷேகம் கடந்தாண்டு வரை ரத்து செய்யபட்டன. பின்னா், அரசு வழிகாட்டுதலுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தா்களுக்கு மலைக்கோயிலில் நேரில் வருபவா்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

இதனால், பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இரு முறை திருத்தணி மலைக்கோயிலுக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தா்கள் ttps://tiruttanigaimurugan,hrce.gov.in என்ற இணைதளம் மூலம் மேற்கண்ட டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல், திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் மலைக்கோயிலில் உள்ள உண்டியல்களில் மட்டும் செலுத்தி வந்தனா். இந்த நிலையில், கோயில் நிா்வாகம் க்யூஆா்கோடு ஸ்கேன் மூலம் நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு மலைக்கோயிலில், தோ்வீதியில் நான்கு இடங்களில் க்யூஆா்கோடு விளம்பர பலகைகளை வைத்துள்ளது. இனிவரும் நாள்களில் பக்தா்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலம் க்யூஆா் கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள், நன்கொடைகளை செலுத்தலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT